Nagarathar - History

பூர்வீக வரலாறு

கிட்டத்தட்ட ஐயாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சமூகம் நகரத்தார்கள். காலத்திற்கேற்ற புதிய பரிமாணமும், எந்தச் சூழ்நிலையிலும் தமது சமூகம் வளர்த்து பெருமை காத்த இவர்களது பரிணாம வளர்ச்சியும் போற்றுதலுக்குரியது. ஆதியில் நாக நாட்டில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படும் இந்த மக்கள் கலியுகம் பிறந்து 204ம் வருடத்தில் காஞ்சி மாநகரம் குறும்பர்கள் வசம் இருந்த போது அங்கு குடியேறிருக்கிறார்கள். கால மாற்றத்தால் குறும்பர்கள் வசமிருந்த காஞ்சி மண்டலம் தொண்டை மண்டலமானது.

தொண்டை மன்னனும் நகரத்தாரும்

தம் உழைப்பாலும், உயர் பண்புகளாலும், செல்லும் இடமெல்லாம் தமிழ் வளர்த்து முன்னேறிய நகரத்தார் பெரு மக்களின் அருமை உணர்ந்த தொண்டை மன்னன் நகரத்தார் மக்களை நன்கு உபசரித்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து தன் நாட்டிலேயே நிலைப்படுத்திக் கொண்டான். தன வைசியர்களான இவர்கள் பொன், ரத்தின வணிகத்திலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். தொண்டை மண்டலம் உலகப் புகழ்பெற்ற வணிக மையமாகவும் நல்லாட்சி நடந்து வந்த அரசு எனவும் வரலாறு கூறுகிறது. ஒவ்வொரு புகழ் பெற்ற அரச வம்சாவளியும் மண்மூடிப் போனதற்கு மிக முக்கியமான காரணம் கொடுங்கோன்மை புல்லுருவிகள் தான். அப்படி ஒரு புல்லுருவியாக பிரதாபன் என்னும் கொடுங்கோலன் சிம்மாசனமேற நகரத்தார்களின் நிம்மதி பறிபோனது. வணிக ரீதியான அநீதிகளைப் பொறுக்க முடியாது, 2108 வருடங்கள் வாழ்ந்து செழிப்பாக்கிய காஞ்சி மண்ணை விட்டு 8000 நகரத்தார் குடும்பங்களும் தெற்கு நோக்கி புறப்பட்டுச் சோழ நாட்டிற்கு வந்தார்கள்.

சோழ நாட்டில் நகரத்தார்கள்

சோழ நாடு விவசாயத்தில் சிறந்து தொழிலில் பின் தங்கியிருக்கவே அப்போது சோழநாட்டை ஆண்ட மனுநீதிச் சோழன் நகரத்தார்களின் வருகையால் மிக்க மகிழ்ந்து வரவேற்று இவர்கள் குடியிருக்க காவிரிப்பூம்பட்டினத்தில் கிழக்கு, மேற்கு, தெற்குத் தெருக்கள் என ஒதுக்கித் தந்தான். நகரத்தார், அரச வம்சத்திற்கு மகுடம் சூட்டுகிற உரிமை தந்து 'மகுட வைசியர்' என்ற பட்டமும் தந்து கௌரவமாக நடத்தப்பட்டார்கள். இவர்களது மாளிகையில் தங்கக்கலசம் வைத்துக்கொள்ள அனுமதி தந்து சிங்கக்கொடிவிருதும் தந்து சிறப்பித்ததாக வரலாறு கூறுகிறது. அரசு கஜானாக்களை விட இவர்களிடம் மிகுந்த செல்வமிருந்ததாகத் தெரிகிறது. ஒரு கலையிலோ, தொழிலிலோ நிகரற்றவர்களுக்கு அறிகுறியாக சிங்கக் கொடிவிருது தரப்படுவதும், செல்வத்தில் நிகரற்றவர்களுக்கு அடையாளமாக தங்கக்கலசம் வைக்க அனுமதிப்பதும் அரச மரபு என்பதிலிருந்து இவர்களின் செல்வ நிலையும், தொழில் மேன்மையும் அறிந்து கொள்ள முடிகிறது. பூவந்திச்சோழன் என்னும் அரசன் நகரத்தார் சமூகப் பெண்களுக்கு தீவினை செய்யத் துணிய தங்கள் ஆண்பிள்ளைகள் 1502 பேரையும், அவர்களது அனைத்துச் செல்வத்தையும் உபாத்தியாயராய் இருந்த ஆத்மநாத சாஸ்திரியாரிடத்தில் ஒப்புவித்து,சிசு பரிபாலனமும் மரகத விநாயகர் பூசையும் செய்விக்கச் செய்து மானம் காக்கும் பொருட்டு 8000 குடும்ப மக்களும் பிராணஹானி (தீயில் விழுந்து தற்கொலை செய்தல்) செய்து கொண்டார்கள். பூவந்திச்சோழன் காலத்தில் அவன் தனது காவலர்களை ஏவி நகரத்தார் மாளிகையின் வெள்ளிக்கதவுகளைக் கவர்ந்து வரச்செய்து, பின் அதனைப் பார்த்து பரிகசிக்கப் போனபோது அம் மக்கள் தங்கள் மாளிகையில் பொன்னால் கதவுகள் பொருத்தியிருந்ததைப் பார்த்து பொறாது அவர்களின் பால் துரோக எண்ணங்கொண்டு துன்புறுத்தினானாம். ஆத்மநாத சாஸ்திரிகள் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களைப் பரிபாலனம் செய்து வர, இவர்களின் குருவாக ஈசான்ய சிவாச்சாரியார் இருந்தார். பூவந்திச்சோழன் காலமாக, ராஜபூஷணச்சோழன் முடிசூட வேண்டிய காலம். முடிசூட்டும் மகுட வைசியர்கள் மனையாள் இல்லாத தனியர்கள். ஆகவே இவர்களுக்கு மணம் முடிக்க எண்ணி சகல அறநூல்களையும் நன்கு ஆராய்ந்து வேளாள குலப் பெண்களை மணம் முடித்து வைப்பது தகுதி என்று முடிவு செய்து கார்காத்த வேளாளர், சோழிய வேளாளர், காணியாள வேளாளர் பெண்களை நகரத்தார் இளைஞர்களுக்கு மணமுடித்து பின் மன்னனுக்கு முடிசூடினார்களாம். பழம் பகை மறந்து அரசன் நகரத்தார் மக்களிடம் அன்பும், ஆதரவும், சகல மரியாதையும் தந்து கௌரவித்தாராம்.

பாண்டிய நாட்டில் நகரத்தார்

பாண்டிய தேசத்து சௌந்தரபாண்டிய அரசன் தமது அரசாங்கத்தில் நற்குடி வேண்டி சோழ மன்னனிடத்தில் வேண்ட,அப்படியே அனுப்பி வைப்பதாக உறுதியளித்து நகரத்தார் சிலரை பாண்டிய தேசம் போயிருக்கும்படி வேண்ட அவர்களோ "எங்கிருந்தாலும் நாங்கள் பிரியாதிருப்போம் என்றும்,தாங்கள் நடத்திவந்தபடி பாண்டிய மன்னனும் மன்னிணை மரியாதை தந்து,அபிமானமாய் சம்ரக்ஷணை செய்வதாய் தங்கள் முன்னால் உறுதியளித்தால் நாங்கள் போகச்சித்தமாயிருக்கிறொம்" என்று கூற சோழ மன்னன் முன் பாண்டிய மன்னன் உறுதியளித்து நகரத்தார் மக்கள் பாண்டிய தேசம் வந்தது வரலாறு.காரைக்குடி அதனைச்சுற்றியுள்ள 74 கிராமங்களில் இவர்கள் தங்கள் குடியிருப்பை அமர்த்திகொண்டனர்.இவர்கள் சைவ நெறியைக் கடைப்பிடிப்பவர்கள்.தீட்சையும்,உபதேசம் பெற்று சிவபூசை நித்தம் செய்பவர்கள்.சிவபூசை எடுத்தவர்கள் புலால் உண்ண மாட்டார்கள்.மூன்று வேளாளப் பெண்களை மணந்த நகரத்தார் காலப்போக்கில் மூன்று பிரிவாகி ஒவ்வொரு பிரிவிற்கும் அரியூர்,சுந்தரப்பட்டினம்,இளையாற்றங்குடி நகரங்களும்,ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு கோவில் வீதம் சுந்தரப்பட்டினம் கோவில்,இளையாற்றங்குடிக்கோவில்,பிரான்மலைக்கோவிலும் விட்டுக்கொடுத்து கூட வந்த குருஸ்தானங்களுக்கும் க்ஷேத்திர சுவாத்தியங்களும் விட்டு,சகல மரியாதையும் பாண்டியமன்னர் செய்ததாக நகரத்தார் வரலாறு கூறுகிறது.

உறவுமுறைப் பெயர்கள்

ஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகின்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும் மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று முறைப்பெயர்கள் உருவாக்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப் பெயர்கள் குடும்பப்பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள், என்ற நிலையில் பகுத்துக்காண இயலுகின்றது.

- Courtesy - Wikipedia